புதன், 16 அக்டோபர், 2013

பெண் கல்வி

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.
                 ''பெண்கள்பக்கம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன். பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்றால் கல்வி கற்பதை கட்டாயமாக்க வேண்டும்.கல்வியே அனைவரையும் கரை சேர்க்கும் கலன்.
                            இயற்கையாகவே ஆண்,பெண் உறவுமுறையில் ஏற்படும் அதிகாரப்போட்டியில் இயற்கைச்சூழலை ஆதாரமாக வைத்து பெண்ணை அடிமைப்படுத்தி தனது மேலாட்சியை கோலோச்சிவிட்டது ஆண் வர்க்கம்..முதலில் பெண்களுக்கான அறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தினான்.இதற்காக பல தந்திரங்களை கையாண்டான்.அதாவது குழந்தைப்பருவத்திலேயே திருமணம் செய்துவிடுவது.ஆனால் ஆணுக்கு வயது வித்தியாசம் கிடையாது?!?. அடுத்து பெண்களுக்கான கற்புக்கோட்பாடு.இதுவும் ஆணுக்கு கிடையவே கிடையாது?!?.
      தாய்மையைக்கொண்டாடுவது!.குழந்தைப்பேறு?இது இயற்கையின் விதி. உயிரினமாக பிறந்த எந்த ஜீவனும் பெண்தானே பெற்றெடுக்க வேண்டும்.இதில் என்ன சந்தேகம்?இப்படி எல்லாம் கற்பிக்கப்பட்ட வாழ்க்கைமுறையை பெண்களுக்குத்திணித்தான் ஆண்.இதனால் குழந்தையிலேயே திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை (இல்லை) குடும்பச்சுமையை ஏற்று குடும்பத்தை காப்பதிலேயே தனது சிந்தனையை அறிவை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு அதன் விளைவாக ஆணையே வாழ்க்கை முழுவதும் நம்பி இருக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டான் ஆண்.
            பெண்ணை ''இருகால் முளைத்த நடமாடும் கருப்பை'' என்றே முடிவு கட்டிவிட்டான்.அதாவது ''பிள்ளை பெறும் இயந்திரம்'' என்று பெண்ணையே நம்ப வைத்துவிட்டான்.ஆண் என்றால் எது வேண்டுமானாலும் செய்யலாம்.அதுவே பெண் என்றால் எதுவும் செய்யக்கூடாது.இது ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மூத்த பெண்களே அடக்கி வைக்கும் கட்டுப்பாடு.
               வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் காலப்போக்கில் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டு நாளடைவில் ''பெண்ணுக்கு அழகு அறியாமையே''! என்று புனைந்துவிட்டது ஆண் வர்க்கம்.இதனாலேயே பெண்கள் தாழ்வான நிலைக்கு தள்ளப்பட்டு பல நூற்றாண்டு காலமாக அதுவே தொடர்கதையாக நடந்து வந்தது.
                இத்தகைய இந்தியப் பெண்களின் நிலை இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால்தான் மெல்ல மாறத் தொடங்கின.ஆமாங்க! 

 கல்வியை ஆங்கிலேயரே ஜனநாயகப்படுத்தினர்.
              .ஜாதி,மதம்,இனம்,பால்வர்க்கம் என்கின்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி, அதுவும் ஒரே மாதிரியான கல்வி என்றனர்.இந்த சமகல்விக் கொள்கைதாங்க இந்தியாவில் பெரும் மாற்றங்களும்,சிந்தனைப்புரட்சிகளும் தோன்ற வழிகாட்டியது.
                 ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கிறித்துவர்கள் மேற்கொண்ட பல பணிகளுள் ''பெண்கல்வி''யும் குறிப்பிடத்தக்க பணியாக செயல்படுத்தினர்.இந்திய சமூக சீர்திருத்தவாதிகளும் கிறித்துவர்களோடு இணைந்து பாடுபட்டதன் விளைவு பெண்கல்விக்கு அடித்தளமாக அமைந்தது.அதன் பயனாக பல கல்விக்கூடங்கள் திறந்துவிடப்பட்டன.
                  கிறித்துவ சமய போதகர்கள் மாநில வாரியாக பெண்களுக்கான கல்வி நிலையங்களை ஏற்படுத்தினர். 
          கி.பி.1854-ஆம் ஆண்டில்''சார்லஸ் வுட்''என்பவர் இந்திய கல்வி நிலை சம்பந்தமான அறிக்கை ஒன்றினை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தார். 
                   அவ்வறிக்கை ஆண் கல்வியைக்காட்டிலும் பெண் கல்வி பெற்றால் சமுதாயத்தில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று உணர்த்தியது.அதன் விளைவாக பெண் கல்வி மேம்பாட்டிற்கு சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டது.
            அதன் விளைவாக கிறித்துவ சமயத்தினரும்,தன்னார்வத்தொண்டர்களும் ஆங்காங்கு பல இடங்களில் பெண்களுக்கான கல்விக்கூடங்களை திறந்து சேவை செய்யலாயினர்.
             கி.பி.1882-ஆம் ஆண்டு ''ஹண்டர்'' தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக்குழு பெண்கள் கல்விக்கு குழந்தை திருமணமே தடையாக இருப்பதை சுட்டிக்காட்டியது.அதோடு நில்லாமல் பெண்களுக்கு கல்வி கொடுக்கும் நிறுவனங்களுக்கு சமய வேறுபாடின்றி ஊக்கமளித்து உதவித்தொகையும் வழங்க வேண்டும் என்பது உட்பட எட்டு பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தது.
                  கி.பி.1889-90 ஆம் ஆண்டு கல்வி அறிக்கையில் ''டாக்டர் குக்கான்'' என்பவர் ஒரு சமுதாயம் படித்த ஆண்களை மட்டும் கொண்டிருந்தால் முன்னேறமுடியாது.பெண்களும் படிக்க வேண்டும் என்று பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.இதன் பின்னரே பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்காக தேசப்பக்தர்களும்,சுதேசியவாதிகளும்,சமுதாய சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவ முன்வந்தன.
                   ஆனாலும் ஆணாதிக்கப்போக்கே வலிமையடைந்து பெண் கல்வியை மறுத்து அடிமைப்படுத்தியுள்ளனர்.எழுச்சிகளும்,போராட்டங்களும் காலங்காலமாக நடந்து வந்தாலும் இன்னும் பெண்களை இரண்டாந்தரமாகவே நடத்தப்பட்டுவரும் சமூக மனப்பாங்கு விலகவில்லை.
                      இன்னும் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடும் நிலையும் மாறவில்லை.அவளின் ஒவ்வொரு அசைவும் கண்காணித்து அலசப்படுகிறது.வெட்கப்படவேண்டிய,வேதனைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. 
                  பெண்களின் பங்கு என்பது இந்த சமூக வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.பெண்கள் இல்லாமல் ஆண்களால் எதையும் சாதிக்க முடியாது. 
               ஏட்டில் எழுதிய நாம் இன்று கணினியில் எழுதுகிறோம்.புறாவை தூது விட்ட நாம் மின்னஞ்சல் செய்து அசத்துகிறோம்.ஆனால் பெண்களை மட்டும் அடங்கு என்று சொல்கிறோம்.இதென்ன வேதனை?
                        ஒரு சொல்லை ஆணிடம் சொன்னால் அவனால் அந்த சொல்லுக்கு ஒரு அர்த்தம் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும்.அந்த சொல்லையே ஒரு பெண்ணிடம் சொன்னால் அவள் நன்கு யோசித்து பல அர்த்தங்களை கண்டுபிடிப்பாள்.
                             ஒரு விசயத்தை சொன்னால் அதை ஏற்று அதற்கு பதில் சொல்லும் தன்மை ஆண்களின் மூளையில்  ஒரு பங்கு என்றால் அதுவே பெண்களின் மூளையில் ஆறுபங்கு அதிகம்.இது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு ஆகும்.
                    ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் கல்வி ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைக்கும்.எனவே நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி மிக முக்கியம்.

பாலியல் தொந்தரவு

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.
                       ''பெண்கள் பக்கம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.போராடி,போராடித்தான் உயர்ந்திருக்கிறது -நமது இந்திய நாடு.
                      சிலரின் நன்மைக்காக வளைந்து,வளைந்து போதனால்தாங்க களையப்பட வேண்டியவைகள் இன்னும் களையப்படாமலேயே இருக்கின்றன.
                     கல்வி,அறிவியல்,தொழில்நுட்பம் என நிறைய வளர்ந்து இருக்கிறோம்.ஆனால் நாகரீகம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு,சுற்றுப்புறச்சூழல் மாசடைதல்,புற்றீசல் போல ஜாதி சங்கங்கள்,பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரம்,என வேண்டாத பலவற்றை வளர்த்தியும் இருக்கிறோம்.
             நமது வாழ்க்கைப் பயணப் பாதையில் இவை தேவைதானா?சிந்தியுங்கள். 
                 நம்மை ஈன்றதும் பெண்ணே!,நம்முடன் பிறந்ததும் பெண்ணே!,நமது இல்லத்துணைவியும் பெண்ணே!,நமக்கு பிறந்ததும் பெண்ணே!,
                    இதனை உணர்வது எப்போது?.உங்கள் வாழ்க்கை அழகு மிக்கது. ஆழ்ந்த கவனமே மிகப்பெரிய வெற்றி-இனியாவது செயலில் இறங்குங்கள்.

மகளிர் மட்டும்


 மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.''பெண்கள்பக்கம்''வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
               பெண்களுக்கென்றே தனி வலைப்பக்கம் உருவாக்கி அதில் பெண்களுக்கான தனி உரிமை,சம உரிமை,அத்தியாவசிய தேவைகள்,சமூகப்பாதுகாப்பு,வெளி உலகம் தெரிந்துகொள்ளல்,போன்ற பல விசயங்களை பதிவிட உள்ளேன்.அனைவரின் ஆலோசனை மற்றும் தகவல்களின்படி கருத்துக்களை சேகரித்து பதிவிட உள்ளேன்.விரைவில்............